search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பீர் சதம்"

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி வீரர் கம்பீர் சதம் அடித்தார். #RanjiTrophy #Gambhir
    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லியில் நடந்து வரும் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 3-வது நாள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து 19 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவுதம் கம்பீர் 185 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் கம்பீர் முதல் தர போட்டியில் பதிவு செய்த 43-வது சதம் இதுவாகும்.

    இந்தூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரோஹேரா 267 ரன்கள் (21 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 21 வயதான அஜய் ரோஹேரா படைத்தார். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டில் மும்பை வீரர் அமோல் முஜூம்தார் 260 ரன்கள் எடுத்ததே முதல் தர போட்டியில் அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. ரோஹேராவின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியுடன் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் வெற்றியை வசப்படுத்தியது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் ( பிரிவு) கேரள அணி முதல் இன்னிங்சில் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பாபா இந்திரஜித் (92 ரன்), கவுசிக் காந்தி (59 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கேரளா நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. #RanjiTrophy #Gambhir
    ×